ஓட்டு போடணுமா?

6 கோடி 29 லட்சத்துக்கும் மேல் தமிழக வாக்காளர்கள். ஆளுமை பத்திதான் இந்தத்தேர்தல்ல பேச்சு. தமிழகத்தின் இரு பெரும் ஆளுமைகள் இப்போ இல்ல. இதுவரை இருந்த ஆளுமையைப்பாத்து மட்டுமே ஓட்டுப்போட்ட வாக்காளர்களின் மன நிலை, இன்று எப்படி இருக்கிறது என்பதைத்தேர்தல் முடிவு செய்யும்.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 91000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தத்தேர்தலுக்கு முன் லாக்டவுன் நம் கண் முன்னே வருது. லாக்டவுன் போது பலர் தற்காலிகமாக வேலை இழந்தாங்க, பலரின் தொழில், வருமானம் பெரிதளவில் பாதிக்கப்பட்டது. உண்மை. நிச்சயம் அது நடந்திருக்கக்கூடாதுதான். ஆனால், இந்த சமயத்தில் பரவும் தொற்றைக்கட்டுப்படுத்த வேறு வழியே இல்லாமல்தானே  இது நடந்தேறியதுனு மனசுக்கு தெரியுது. நம்முடைய அறிவு “நான் பாதிக்கப்பட்டேனே” அப்படினு நினைக்குது, அப்போது மனசும் வலிக்குது.

ஒன்னு புரிஞ்சுக்கணும். அமெரிக்கா மாதிரியான, வளர்ந்த நாடுகள்லேயே இன்றும் கூட நோயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள். 33 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவில் நேற்று வரை(3 ஏப்ரல் 2021) இன்னமும் 69 லட்சம் மக்கள் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருக்காங்க.

ஆனால், 139 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் சுமார் 6 லட்சம் பேர்தான் இப்போது சிகிச்சையில் இருக்காங்க. இது எப்படி சாத்தியப்பட்டது. லாக்டவுன் தொற்றைக்கட்டுப்படுத்திச்சு, உயிரிழப்புகள குறைச்சுது. ஆனா இது வரும் நாட்களில் கிடுகிடுவென ஏறும். நடந்து முடிந்த தேர்தல் பரப்புரைகள் அதற்கு காரணமாய் இருக்கும்.

ஒரு வைரஸ் அதன் தன்மையை காலப்போக்கில் மாத்திக்கொள்ளுமாம். படிச்சிருக்கோம். இதைத்தான் ம்யுடேஷன் னு ஆங்கிலத்துல சொல்றாங்க. அப்படி மாறும் போது அதன் வீரியம் அதிகரிக்குமே தவிர, குறையாது. இந்தச்செய்தி எல்லாமே உங்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வுக்காக மட்டுமே, பயமுறுத்த அல்ல. உரு மாறியிருக்குற இந்த வைரஸ், அதிக வீரியம் பெற்றுவிட்டதாகவும், இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம்னு மருத்துவ உலகில் இப்போது பேச்சு. இதுவும் தகவலுக்காக மட்டுமே இங்கே பகிரப்படுகிறது.

தமிழ்நாட்டில் 21 லட்சத்துக்கும் மேல் முதல் முறை வாக்காளர்களைக்கொண்டது இந்தத்தேர்தல். லட்சக்கணக்கில் கூட்டம் சேர்த்து, பொதுக்கூட்டம் நடத்தி, தொற்றைப்பெருக்க காரணமா இருக்காங்களோனு பலருக்கும் கவலை ஏற்படுது. இது தானா சேர்ந்த கூட்டமா?. காசு கொடுத்து ஏதோ வச்சுக்கறது னு சொல்வாங்க, அது மாதிரிதான் இருக்கு.

கூட்டம் கூடுவது பணத்திற்காகத்தான், இல்லை பணத்திற்காகவும்தான். கட்சியிலேயே கோடிக்கணக்கான தொண்டர்கள் இருக்காங்களே! கட்சிக்காக உயிரை கொடுக்கறது அப்படிங்கறது, இந்த தொற்றால் நடந்துடக்கூடாதுனுதான், இப்போதைக்கு நம் எண்ணமா இருக்கு. இதை எழுதும் நேரத்தில் தொற்று அதிகமாகிக்கொண்டு இருக்குனு புள்ளி விவரம், நமக்கு உணர்த்துது.

கட்சிகளோட பரப்புரையெல்லாம் இன்னியோட முடியுது. வாக்காளர்களாகிய மக்கள், தங்களோட ஊர்களுக்கு சென்னையிலிருந்து மட்டும் சுமார் 5100 சிறப்பு பேருந்துகளில், பல ஆயிரம் மகிழுந்துகளில்(கார்), தொடர் வண்டிகளில்(ட்ரெயின்) னு கிளம்ப ஆரம்பிச்சாச்சு. தலைவர்கள் பேச்ச கேட்க கூட்டம் கூடியது போய்,  ஊர்களுக்குச்செல்ல இப்போது கூட்டம் அலை மோதுகிறது. இந்தக்கூட்டம் போன வருடத்தை ஞாபகப்படுத்துது. தேர்தலுக்குப்பின் லாக் டவுன் வராது என்பது சொல்வதற்கு இல்லை.

பல பேர், வீட்டிலிருந்து கிளம்பி வெய்யிலில் கால் வலிக்க நின்னு, அப்படியாவது இந்த ஓட்ட போட்டுத்தான் ஆகணுமானு நினைக்கிறாங்க. வீட்டைவிட்டு அதிகமாக வெளியில் செல்லாத பெரும்பான்மையான இல்லத்தரசிகளும், வயது முதிர்ந்தவர்களும் யோசிக்கிறாங்க. லாக் டவுன் முதல் வீட்டிலேயே வேலை பார்த்துக்கொண்டிருக்கும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஊழியர்களுக்கும் இந்த எண்ணம் வந்திருக்கு. அவர்களோட பேசும்போது இத என்னால உணர முடிஞ்சுது.

இதில் கூடுதல் பயம், தொற்று பரவலாலும்தான். பாதுகாப்பா போயிட்டு ஓட்டு போட்டுட்டு வர முடியுமான்னு ஒரு கேள்வி எல்லாரிடத்திலும் இருக்கு. கட்சிகள் நிமிடத்துக்கு நிமிடம் ஊடகங்கள் வழியா விளம்பரம் செய்து ஓட்டுக்கேட்கும் பணியை சிறப்பாக செய்யுது…ஆனா வாக்காளர்களை தேர்தல் மையத்துக்கு வர வைக்க, பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி செய்யப்பட்டிருக்குனு தேர்தல் ஆணையம் இன்னும் விளம்பரம் செய்யல. ஒரு வாக்குசாவடிக்கு அதிக பட்சம் 1000 பேர் என்பதுதான், தேர்தல் ஆணையம் வகுத்திருக்கும் யுக்தி. அதனாலதான் வாக்கு சாவடி எண்ணிக்கை இந்த முறை உயர்ந்திருக்கு.

நம்ம பாதுகாப்பான இடத்துக்கு போறோம். நமக்கு தொற்று ஏற்பட வாய்ப்பே இல்லைங்கற நிலைமை இருந்தாதான் வாக்காளர்களாகிய மக்கள், சற்றும் யோசிக்காமல் வாக்களிக்க வருவாங்க. இதை தேர்தல் ஆணையம், தேர்தலை சிறப்பாக நடத்துவதைப்போலவே, இதையும் சிறப்பாக செய்வார்களாயின், வாக்குப்பதிவின் சதவிகிதம் ஏறும். சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் இதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்யணும். செய்யுமா?

உங்களுடைய தகவல் மற்றும் விழிப்புணர்வுக்காக, தலைமைத்தேர்தல் அதிகாரி செய்தியாளருக்கு அளித்த பதில்கள் இங்கு பதியப்படுகிறது.

1. நீங்கள் வெளி ஊர்களில் பணி நிமித்தமாகவோ, இல்லை வேறு காரணங்களுக்காகவோ இருப்பீர்களானால், நீங்கள் அங்கிருந்து கொண்டே ஓட்டு போட வழி இல்லை. பூத்தில் சென்றுதான் வாக்களிக்க வேண்டும். ஊருக்குத்தான் வந்தாக வேண்டும்.

2. ஓட்டு போட்டால் அதற்கான சாட்சியாக, அந்தப்பதிவின் ஸ்லிப் ஏதும் கொடுக்கப்படமாட்டாது. குறுஞ்செய்தி எனப்படும் எஸ் எம் எஸ் அனுப்பப்படும் நடைமுறையும் இப்போது இல்லை. ஆனால் ஒரு கருவியில், நீங்கள் எந்தச்சின்னத்துக்கு வாக்களிதீர்களோ அது தெரியும்.

3. வாக்குச்சாவடிகளில் (பூத்) களில் அலைபேசி (செல்போன்) எடுத்துச்செல்ல அனுமதி இல்லை.

4. மின்னணு வாக்கு இயந்திரத்தில் யார் எந்த தேதியில், எந்த நேரத்தில் வாக்களித்தார் என்பதை அறிய முடியும்

5. நீங்கள் வாக்களிக்கும் கட்சியின் சின்னத்தில், வாக்கு இயந்திரத்தின் விளக்கு எரியவில்லை எனில், பிரிசைடிங் ஆபிசரிடம் முறையிடலாம். அது உண்மை என்பதை சரி பார்க்கப்பட்டால், வாக்குப்பதிவு நிறுத்தப்படும். இல்லை என நிரூபிக்கப்பட்டால், முறையிட்டவரை சிறை செல்லவும் நேரிடலாம்.

6. வாக்கு செலுத்துவதற்கு பூத் ஸ்லிப் அவசியமில்லை. அரசின் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளான ஆதார் முதலியவற்றை காண்பித்து வாக்கு செலுத்தலாம்.

7. நோட்டாவை விடவும் ஒரு வேட்பாளர் குறைவான வாக்கு பெற்றாலும், நோட்டாவுக்கு அடுத்த அதிக வாக்கு, என்ற அடிப்படையில் அவர் வெற்றி பெற்றவர் என அறிவிக்கப்படுவார்.

8. வெளி நாடு வாழ் இந்தியர்களானாலும், அவரவர் தொகுதியில்தான் அவர்கள் வாக்கு செலுத்த முடியும்.

9. தேர்தல் நடத்தை விதிகளின்படி, பத்து லட்சத்துக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்ட பணம், வருமான வரித்துறைக்கு தெரியப்படுத்தப்படும்.

10. மிக முக்கியமான செய்தி – காலை ஏழு மணி முதல், இரவு ஏழு மணி வரை இந்தத்தேர்தலில் வாக்களிக்கலாம்.

கவனமாய் இருந்து நம் ஜனநாயகக்கடமையை ஆற்றுவோம். யாருக்கு ஓட்டோ, கரெக்ட்டா போட்ருவோம்!!

இளையராஜாவின் சாபம்

தமிழ் திரை இசைல இளையராஜாவின் பங்குன்னு புத்தகம் எழுத யாராவது முயற்சிப்பாங்கன்னா, குறைஞ்சது ஆயிரம் பக்கங்கள் கொண்ட பத்து பகுதியா, அந்த புத்தகத்த வெளியிட வேண்டி இருக்கும்.

ராசையா,  இசை அமைப்பாளர் தன்ராஜ் மாஸ்டரால ராஜா என்று செல்லமா கூப்பிடப்பட்டு, பின் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம்னால இளையராஜான்னு அழைக்கப்படுறாரு. இந்தப்பெயராலேயே அன்னக்கிளி படத்துல அறிமுகமும் ஆகுறாரு. அதுக்கப்பறம் நடந்ததெல்லாம் வரலாறு.

பிரசாத் ஸ்டூடியோ அப்படிங்கறது, சென்னை சாலிகிராமத்துல இருக்கு. இங்க இளையராஜாவுக்குன்னு ஒரு அறை, 1977 ல, அதன் நிறுவனர் எல் வி பிரசாத் குடுக்கறாரு. சுமார் 40 வருஷத்துக்கும் மேல, இங்கிருந்துதான் தன்னுடைய பாடல்கள இசை அமைக்கிறாரு இளையராஜா. இந்த அறையோட கதவு எப்போ தொறக்கும், நம்ம எப்போ இசைஞானிய பாக்குறதுன்னு காத்து கெடந்த இயக்குனர்கள் நூத்துக்கும் மேல.

தன் இசை போலவே, கதைக்குள்ள உயிரோட்டம் எதிர்பாக்குற இசைஞானிய எளிதுல ஒரு படத்துக்கு இசை அமைச்சுட வச்சுட முடியாது. முதல் முறை இயக்குனர்னாலும் பாரபட்சம் எல்லாம் கெடையாது. கதை நல்லா இருந்தா மட்டுமே இசை.

நாசர் தன்னுடைய முதல் பட அனுபவங்கள பகிரும் காணொளி கீழ கொடுக்கப்பட்டிருக்கு. “தென்றல் வந்து தீண்டும் போது” அப்படிங்கற பாடல தன் அவதாரம் படத்துல எப்படி அமைஞ்சுதுனு  நகைச்சுவையா சொல்றாரு.

நாசர் பேச்சு: https://youtu.be/563qJOreBqI

பாடலுக்கான லிங்க்: https://youtu.be/Ue5GbzWXZpY

தனக்குனு பிரசாத் ஸ்டூடியோவின் நிறுவனரால கொடுக்கப்பட்ட அறைய, அவர் பேரன் சாய் பிரசாத் கேக்க, அங்கேதான் எல்லாம் ஆரம்பிக்குது. நீதிமன்றம் போற வழக்குக்கு என்ன தீர்ப்பு வரும்னு எல்லாரும், குறிப்பா இசைஞானி ரசிகர்களும், திரை உலகமும் எதிர்பார்த்து காத்துகிட்டிருக்கு.

40 வருசமா ஒரு மனுஷன் தன்னோட உயிர் மூச்சா நேசிக்கிற ஒரு இடத்த, அது இடம்னு சொல்லக்கூட வரல. எவ்வளவு நினைவுகள் இருக்கும்!!. இயக்குனர்கள் பாரதிராஜா, பாலசந்தர், பாக்கியராஜ், ஆர் பார்த்திபன், ஆர் கே செல்வமணி, மணிரத்னம், ஆர் வி உதயகுமார், பி வாசு, விசு, ஆர் சுந்தர் ராஜன் – இவங்க பேர் சொன்னவுடனே இவங்களோட படமும், அந்த படத்தில் வந்த ஒரு பாடலாவது கண் முன்னாடி வந்து போகுதா இல்லையா…..அதுதான் மேஸ்ட்ரோ…

2017 ல பாடகர்கள் எஸ் பி பாலசுப்ரமணியம், சித்ரா, எஸ் பி சரண் ஆகியோருக்கு, ஒரு சட்ட அறிவிப்ப அனுப்புறாரு இளையராஜா. தன்னோட பாடல்கள முறையான முன் அனுமதி இல்லாம மேடைக்கச்சேரிகள்ல பாடக்கூடாது. இது காப்புரிமை சட்டத்துக்கு எதிரானதுனு, குரல் கொடுக்குறாரு. தான் இசை அமைச்சதுக்கான உரிமைத்தொகைய கொடுக்காம, ஆனா மேடையில அதனால வர ஊதியத்த மட்டும் அனுபவிக்க முடியாதுங்கறதுதான் இந்தச்செய்தியின் உள்ளடக்கம்.

எஸ் பி பி ரசிகர்கள் மனம் வருந்துறாங்க. இசைஞானிய வேறு விதமாவும் பேசுறாங்க. இதக்கூர்ந்து கவனிச்சோம்னா ஒரு விசயம் விளங்கும். தப்பு செய்யுறது தனது நண்பன்னாலும், கேட்பது என்னோட உரிமைனு ஆணித்தரமா சொல்லாம சொல்லிட்டாரு இசைஞானி. எத்தனையோ ஆடியோ கம்பெனிகள் மேலயும் 2015ல வழக்கு தொடுத்திருக்காருங்கறதையும் செய்தியா படிச்சிருக்கோம். ஆங்கிலத்தில் இந்த செய்தி ஆங்கிலத்தில் கீழ கொடுக்கப்படிருக்கு. எதற்காக இந்த செய்தின்னா, இளையராஜா அவர்களுக்கு சட்டம் என்ன என்பது தெரியும், என்பதற்காக. ஒரு வேளை எல் வி பிரசாத் அவர்கள் அறை எண் 1 ஐ அன்பளிப்பு பத்திரமாக்கி (Gift Deed) பதிவு செய்து கொடுத்து இருந்தா, சட்டப்படி அந்த அறை இளையராஜா அவர்களுக்கு சொந்தமா இருந்திருக்கும். அது அன்றளவில் அன்பளிப்புன்னா, இன்றளவும் அதுவே. ஆனால் சட்டம் எல்லாத்துக்கும் ஆவணம் கேக்கும். அங்கதான் சிக்கல் எழுந்திருக்கும் னு யூகிக்க முடியுது.

What the spat between Ilaiyaraaja and SPB is really about? – The Hindu – https://www.thehindu.com/entertainment/movies/what-the-spat-between-ilaiyaraaja-and-spb-is-really-about/article17665382.ece

தர்மசங்கடம் என்பதாகதான் பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தை முதல்ல பாக்க வேண்டியிருந்தது…ஆனா வழக்காக மாறவும், இது இசைஞானி மற்றும் அவரது ரசிகர்கள கோபமடைய செய்தது. அறை எண் 1 இன் சாவியை நிறுவனர் பிரசாத் அவர்கள் இசை ஞானிக்கு குடுத்த போது இதெல்லாம் வழக்காக வரும்னு அவர் கனவுல கூட எண்ணியிருக்க மாட்டாரு.

அவர் பேரன், அந்த அறையில் இருந்த உணர்வுகளுக்காவது மதிப்பளித்து இதை வேறு விதமா அனுகியிருக்கலாமோனு தோணுது. வழக்கின் தீர்ப்புல, நீதிமன்றம் சில மணி நேரங்கள்ல தன்னுடைய உடைமகள, கருவிகள, விருதுகள எடுத்துட்டு,  இசைஞானி கேட்டுக்கொண்டதின் பேரில் கடைசியாக தன் இசை வாழ்ந்த, வாழ்கின்ற எடத்துல தியானம் செய்யவும் அனுமதிச்சுது. மேல சொன்ன இயக்குனர்கள் பலரும், ஸ்டூடியோ நிர்வாகத்துடன் நடந்த பேச்சு வார்த்தையும் இதுக்கு காரணம்.

தன் ஸ்டூடியோ திறப்பதற்கு முன் இசை ஞானி, “சத்யா ஸ்டூடியோ போலவே, ஜெமினி ஸ்டூடியோ போலவே, விஜயா வாஹினி ஸ்டூடியோ போலவே, ஏ வி எம் ஸ்டூடியோ போலவே, பிரசாத் ஸ்டூடியோவும் காணாமல் போகும்”னு ஒரு சாபமும் விட்டுட்டாரு!

இளையராஜாவின் பேட்டியை பார்க்கவும். https://youtu.be/M0y6RgO4AUs

இன்னிக்கு கோடம்பாக்கத்தில் தனக்குனு ஒரு ஸ்டூடியோவை இசைஞானி கட்டிட்டாரு. சரியா இந்தப்பதிவு வெளியாகிற இதே தேதியில், நேரத்தில்தான் தன் முதல், இரண்டாம் பாடலையெல்லாம் இசை அமைச்சுக்கிட்டு இருப்பாரு. ஆமாம்,  இசை அமைச்சுகிட்டே இருப்பாரு….

இசைஞானி இசை நிகழ்ச்சிகளின் வர்ணனை தொகுப்பு:

யானைய கொன்னுட்டாங்களே……

செய்தி: இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://youtu.be/nIJeXLXPsHA

“பத்து மாசம் சுமந்து பெத்த புள்ளய பறிகொடுத்துட்டு நிக்கறன்யா” ன்னு நம்ம எங்கயாவது ஒரு துக்க நிகழ்வுல கேட்டிருப்போம்…. அப்படி, இப்ப இறந்து போன யானையோட அம்மா அழுகணும்னா, “இருபத்து ரெண்டு மாசம் பெத்த புள்ளய பறிகொடுத்துட்டு நிக்கிறன்பா”ன்னு தான் அழும். ஆமாம், ஒரு யானைய பெத்து எடுக்க தாய் யானைக்கு 22 மாசம் ஆகும்.

“யானைத்தீனி திங்கறான்பா”ன்னு நம்ம யாரையாவது சொல்ல கேட்டிருப்போம். ஒரு யானை ஒரு நாளைக்கு சுமாரா 250 கிலோ உணவ சாப்பிடுமாம். அவ்வளவு உணவும் செரிமானம் ஆகணும்னா அது சுமார் 45 கிலோமீட்டர் நடக்கும்.போற வழியிலயும் அது இஷ்டத்துக்கு சாப்பிடும்.

ஒரு நாள் யானையின் சாணம்  மட்டுமே சுமார் 100 கிலோவுக்கும் மேல். இதுல பலத்தரப்பட்ட பழங்கள், மரங்களின் விதைய யானை யாருக்கும் தெரியாமல் விதைக்குது. தன் வாழ்நாள் வரை இப்படி சுமார் 20 லட்சம் மரங்கள, ஒரே ஒரு யானை உருவாக்குது. சொல்லப்போனா ஒரு காட்டை ஒரு யானை உருவாக்குது.

இதுதான் யானை மனுசங்களான நமக்கு அளிக்கும் ஆசி, வரம்….இத மனுசங்க உணரணும். நாமெல்லாம் விலங்கினங்களுக்கு ரொம்பவும் கடமைப்பட்டிருக்கோம்.

ஒரு நாளைக்கு சுமார் 200 கிலோமீட்டர் நடக்க முடியிற யானையால, ஒரு மனுசனவிட ரெண்டு பங்கு வேகமா ஓட முடியும். இவ்வளவு தூரம் நடந்துட்டு, எவ்வளவு நேரம் யானை தூங்கும்னு நினைக்கிறீங்க. அதிக பட்சம் ரெண்டு மணி நேரம். ஆச்சரியமா இருக்கா?. ஆமா, யானை ஒரு அதிசயப்பிறவிதான்.

தன்னோட காதுகள வேகமா அடிச்சுதான் தான் சந்தோசமா இருக்குன்னு காண்பிக்குமாம். வாலையும் ஆட்டிக்கிட்டு இருக்கும். மனுசங்கள மாதிரியே யானைகள் அழுகும். தன்னோட குழந்தைகள பாசங்காட்டி வளக்கறதுல யானை, மனுசனுக்கு சமம்.

பொறந்த சில மணி நேரங்கள்ல ஒரு குட்டி யானையால நிக்க முடியும். தாய் எழுப்புற சத்தத்தை, 1.5 கிலோமீட்டர் தொலைவு வரை கேக்கவும் முடியும்.

கோயில்கள்ல சங்கிலியால கட்டி வைக்கிற மாதிரி ஒரு கொடுமை உண்டா?. ஒரு நாளைக்கு 40 கிலோமீட்டர் வரை நடக்கும் யானைய, ஒரே எடத்துல கட்டி வச்சு, அதுக்கு அதே 250 கிலோ அளவிலான உணவக்கொடுத்தா..?அதுவும் வெல்லம், வாழைப்பழம்னு கொடுத்தா அதுக்கு சுகர்/நீரிழிவு நோய் வராம, வேற என்ன வரும்?.

யானைகள் மனுசங்களுக்கு ஊருக்குள்ள வந்து கொடுக்குறது தொந்தரவு இல்ல. பழி வாங்குதுங்க…..காட்டுக்குள்ள நீங்க குடிச்சிட்டு போட்ட மது பாட்டில்கள், அதனோட கால்கள எத்தன தடவ பதம் பாத்திருக்கும். நடக்கவே முடியாம ஒரு மரத்துகிட்ட சாஞ்சி நின்னு செத்துப்போன யானைகளோட குடும்பம், உங்கள கும்பிடுமா என்ன…..துவைச்சு எடுக்கும்….

பாகன் ஒரு யானையைப்பழக எடுக்குற முயற்சி அசாதாராணமானது. தன் உயிரயும் பணையம் வச்சு சில உத்திகள அதுக்கு பழக்குவாங்க. அந்த அளவுக்கு அதன் மேல பாசமாவும் இருப்பாங்க. அந்த யானைகளும் பாகன் மேல அவ்வளவு பாசமா இருக்கும். பாகன எசமானனா பாக்குறத விட, ஒரு குடும்ப உறுப்பினராதான் பாக்கும், யானை. அப்படி பாசமா இருக்க யானை, சில நேரம் தன் பாகனை தூக்கி வீசி கொல்லுது. அதுக்கான காரணம் நமக்கு தெரியாது, ஆனா அதுக்கு கண்டிப்பா தெரியும்.

மனுசன் யானைய தன் கைக்குள்ள அடக்குற வித்தைய கத்துக்கிட்டான்னு நினைக்கிறான் . ஆனா யானை அதுக்கெல்லாம் அப்பாற்பட்டதுங்கிறதுனு புரிஞ்சிக்குற அளவுக்கு, அவன் மனம் இன்னும் பக்குவப்படல.

புல்லரிக்க வைக்கும் பூமி படம்

கதைக்களத்த முழுக்க முழுக்க விவசாயத்த பின்னணியா வச்சு எடுத்ததுக்கே இந்தக்குழுவுக்கு நம்ம வாழ்த்துகள சொல்லலாம்யா. பொங்கல் திருநாள் அன்னிக்கு விவசாயத்த போற்றுவோம் னு , பாடமா எடுக்காம, படமா எடுத்துருக்காம்லா, லட்சுமணன். லட்சுமணன் யாரும் தெரியுமுல்லா, படத்தோட இயக்குனரு.

நாசா(அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்லா) விஞ்ஞானியா வர்ற ஜெயம் ரவிக்கு திடீர்னு விவசாயத்து மேல பற்று வருது. அதுக்குக்காரணம் தம்பி ராமையா. காஞ்ச பயிருக்கு நட்ட ஈடு கேட்டு போராடுற தம்பி ராமையா வ, காவல்துறை லத்தியால முட்டிய பேத்து அனுப்ப, கடுப்பான ஜெயம் ரவி, காஞ்சிப்போன பயிரோட சோள மணிகளை (மக்கா சோளம்டே!) ஆராயிராரு….விஞ்ஞானி னு முன்னயே சொல்லியாச்சுல்லா….ஆமா நாசா விஞ்ஞானிக்கு ஏதுல விவசாயம் பத்தின அறிவுன்னு கேக்கறீயளா…அதுக்குதான் முன்னமே செவ்வாய் கிரகத்துல ஜெயம் ரவிய எறக்கி விடுரானுவ….இன்னுமா புரியல,சரி படத்த பாரும், வெளங்கிரும்….

இந்தப்பாவி மக்கா தம்பி ராமையா கலெக்டர் ஆபீஸ் முன்னாடியே தீ குளிக்கிராம்யா..கடன் கொடுத்த விவசாய அமைச்சர் ராதா ரவியோட மச்சான் பின்ன கழுத்த பிடிக்காத கொறையா கடன திருப்பி கேட்டுதான் அவன் இப்படி செய்துதான்…. எழவு வீட்டுக்கு வர்ற ராதாரவிய, ஜெயம் ரவி சரியான கேள்வி கேக்குறாம்யா….அதுக்கு ராதாரவி பதிலத்தான் அட ட்ரைலர்ல கூட போடுறாமுல்லா – “விவசாயினால இந்த நாட்டுக்கு நட்டம், கார்பரேட் னால இந்த நாட்டுக்கு லாபம் னு” சொல்லுதான்

நாட்டு விதைகள நம்ம முப்பாட்டன், கோயில் கலசத்துல வச்சான்னு கேள்வி பட்டிருப்பீகளே…அதத்தான் தம்பி ஜெயம் ரவியும் சொல்லுறாமுல்லா. ஆனா, அத மக்கள வச்சு மனித கோபுரம் செஞ்சு, கோவிலின் புனிதம் கெடாம எடுத்ததுக்குத்தான் பாராட்டணும்கிறேன். படமா இருந்தாலும், பயபுள்ளைங்க விவரமா அந்தக்காட்சிய வச்சானுங்கல்லா….இதுக்குக்கூட உமக்கெல்லாம் புல்லரிக்கலைன்னா என்ன மனுஷனய்யா நீரு….

இந்த உலகத்தையே ஏழு குடும்பம்தான் ஆளுதானாம். அவன் சொல்றதத்தான் நம்ம வியாபாரிங்க கேக்குரானுவளாம். அவன் குடுக்கறதத்தான் நாம திங்கணுமாம். அவன் விக்கிறதத்தான் நாம வாங்கணுமாம். என்ன ஒரு அடாவடி பாத்தீகளா அண்ணாச்சி. பின்ன இத்தனைக்கும் ஜெயம் ரவி ஏதாவது செய்யணுமுல்லா….சும்மா சொல்லக்கூடாது நல்லா செய்யுறாம்யா…..வச்சு செய்யுறது னு நம்ம சென்னை அண்ணாச்சி கூட சொல்லுவாம்ளா…. அதேதான்ங்கிறேன்….

விவசாயமே ஒரு கார்ப்பரேட் மாதிரி நடத்தலாம்ங்கிறான் தம்பி ஜெயம் ரவி. நடத்துங்கிறேன். இந்த ஏழு குடும்ப கம்பெனிகல்ள வேல பாக்குற புள்ளைகெல்லாம் யாருன்னாக்கும். விவசாய நிலம் வச்சிருந்தும், தண்ணியில்லாம விவசாயத்த கை விட்டவந்தான், பூரா பேரும். இப்போ கை கோக்குறானல்லா. சேர்ந்து ஒழைச்சு சந்தைக்கு கொண்ட்டு வர்றான் ஜெயம் ரவி.

அந்த ஏழு குடும்பக்காரன் லாரிகள ஓடாம செய்யுதான், சூப்பர் மார்க்கெட் லையும் ஜெயம் ரவி காய் கறிய வாங்க விடாம பண்ணுதான்.

அடுத்தவன் கிட்ட வாங்குன காய்கறி எல்லாம் பல் விளக்குற பேஸ்டுக்கு இலவசமாவே குடுத்துட்டாம்லா….இதுனால ஜெயம் ரவி காய்கறி கல்லாம் விக்காதுல்லா….ஓடைஞ்சு போறான் தம்பி ஜெயம் ரவி

ஓடியாந்து வந்து பாரு மக்கா, நம்ம மக்க செய்யுற செயலங்கிறா, சரண்யா. அவதான் ஜெயம் ரவியோட தாயி….போயி பாத்து கதறி சந்தோசமா அழுவுரான்யா….ஜெயம் ரவி….ஏன் அழுவுறான், அப்படி மக்க என்ன செஞ்சாங்க, போய் தியேட்டருல பாரும்….அட இந்தப்படம் தியேட்டருல போடுறானில்லா….அது ஏதோ அந்த ஏழு குடும்ப கம்பெனிகாரன் நடத்துற ஒரு ஆப் ல தாம் வருதாம்!

சினிமா பாக்கலைன்னா செத்துருவியா?

என் அம்மா இந்த கேள்விய என்கிட்ட நிறைய தடவ கேட்டிருக்காங்க. அப்போ எனக்கு 15 வயசுக்கு மேல, 22 வயசுக்கு கீழ. அம்மா, அம்மா புது படம் மா, ரஜினி படம்மா….கமல் படம்மா…..

அம்மா ரகுமான் ம்யூசிக் மா, அம்மா அம்மா ஷங்கர் படம்மா னு நிறைய தடவ கேட்டிருக்கேன். அப்போல்லாம் ஒரு கேள்வி கேப்பாங்க. இப்ப இந்த சினிமா பாக்கலைன்னா என்ன செத்துருவியா?

படிப்பு சரியா வராத பல பேரையும் சினிமா பைத்தியம் னு செல்லமா எல்லாரும் கூப்பிட்டாங்க. ஏன்னா சினிமா தலையில ஏறிடிச்சுன்னா படிப்பு தலையில ஒழுங்கா ஏறாது ங்கறது சான்றோர் வாக்கு. இந்தக்காரணத்துக்காகவே சினிமா தியேட்டர் பக்கம் அனுப்ப மாட்டாங்க. படிப்பு கெட்டிடுமாம். ம்ஹும் சினிமா பாக்கலைன்னாலும் படிப்பு வராதுன்னு சொன்னா யாரும் நம்பப்போறதில்ல. ஏன்னா……..படிப்பு வராது. அவ்ளோதான்! சிம்பிள்.

ஒரு முறை நண்பனோடு படம் பார்க்க இரு சக்கர வாகனத்தில் போகும் போது ஒரு விபத்து… எங்க ரெண்டு பேருக்கும் அடிபட்டுது…ஆனா அத்தனையும் உள் காயம். அவனுக்கு சட்டைப்பை மட்டும் கிழிஞ்சிது. எனக்கு உள்ள எங்கேங்கேயோ கிழிஞ்சிது….🙂 அடிபட்ட அடையாளமே எதுவும் இல்லியே, அதனால வீட்டில எதுவும் பிரச்னை ஆகாதுன்னு தெரியும். அதனால பதட்டம் இல்லாம படத்த பாத்தோம். வலி பத்தியா கேக்குறீங்க….ம்…ஊம காயம் னா என்னனு அன்னிக்குதான் தெரிஞ்சுது. நாங்க போன படத்துல குபீர் சிரிப்பு வர்ற காமெடி….ஆ, அம்மானு வலியோடவே படம் பாத்து சிரிச்சிகிட்டு இருந்தது தான், பைத்தியத்தின் உச்சம். இப்ப புரியுதா ஏன் பைத்தியம்னு சொன்னாங்கன்னு….

ஒரு தடவ தேவி தியேட்டர் வாசல்ல, காதல் தேசம் படத்துக்காக லத்தி ல அடி வாங்கினதெல்லாம் என்னனு சொல்ல. “எனக்கு ரெண்டுதான் மச்சி, உனக்கு” என்று நண்பன் கேட்டது, எனக்கு இணையான பைத்தியத்தோடு படம் பாத்திருக்கேன் என்பதை இப்போது நினைத்தாலும் நிறைவா இருக்கு….

எனக்கு தெரிந்து குடும்பத்தோடு நாங்கள் பார்த்த முதல் படமானு தெரியாது, அர்ஜுன் நடித்த “சங்கர் குரு”. அப்பா சைக்கிளில், அம்மாவை பின்னாடி வைத்துக்கொண்டு, என்னையும் என் தங்கையையும் முன்னாடி வச்சுகிட்டு, சென்னை அம்பத்தூர் இல் இருக்கும் ராக்கி தியேட்டருக்கு கூட்டிப்போனது மனசிலிருந்து நீங்கா நினைவு. கஷ்டப்பட்டு அப்பா சைக்கிள் மிதித்து மூச்சு வாங்கியது இன்னும் காதுல கேக்குது…கண் கலங்குது.

எனக்கு பத்தாவது தேர்வு முடிவுகள் வந்த அன்னிக்குதான் என் சித்தப்பா ஊருலிருந்து வந்திருந்தார்.

எல்லாத்துக்கும் என்ன பெஞ்ச் மார்க் ஆ வச்சுப்பாங்க . 60% மேல மத்திய பாட திட்டத்துல வாங்கினத ஸ்டேட் பஸ்ட் ரேஞ்சுக்கு பாராட்டிட்டு, கொழந்தைய திட்டாதீங்க னு சொல்லிட்டு, அழுகுற கொழந்தைக்கு மிட்டாய் மாதிரி,

“சரி வா கண்ணா சினிமா போகலாம்” னு, அவர் கூட்டிட்டு போன படம் “கர்ணா”, ஆவடி ராமரத்னா தியேட்டர்.

என் வாழ்வின் முக்கியமான தருணங்கள்ல அர்ஜுன் எனக்கு ஆறுதல் சொல்லியிருக்காரு என்பதை அறிக 🙂.

படம் பாக்குறதுன்னு வந்துட்டா குடும்பம், நண்பர்களை தாண்டி பக்கத்து வீட்டுக்காரர்களுடனும் போய் படம் பாக்கலாம்னு எனக்கு ஒரு நாள் தெரிஞ்சது…பக்கத்து வீட்டு பெண் பக்கத்து சீட்டுல ஒக்காரணும்னு யாரும் சொல்லாமயே தெரிஞ்சுது.

ஆனா நாங்க போன படம் ஆடி வெள்ளி.

வேலைக்கு போக ஆரம்பிச்சாச்சு. ஓரளவு பெரிய மனிதர் களை சந்திக்கும் வாய்ப்பு உள்ள வேல. சிரிச்சுடாதீங்க

ஒரு பன்னாட்டு வங்கியின் கடன் அட்டை அதாங்க கிரெடிட் கார்டு விக்குற வேல. அப்போல்லாம் கீழ்பாக்கத்தில் ஆர்ம்ஸ் ரோட்டில் வாடகை வீடோ, சொந்த வீடோ இருந்தாலே கிரெடிட் கார்டு குடுத்துருவாங்க.

வசிக்கறாரு அப்படிங்கறதுக்கு ஒரே ஒரு ஆவணம்/டாக்குமண்ட் இருந்தா போதும். எதுக்கு இவ்ளோ செய்தின்னா, ஆளவந்தான்னு கமல் நடிச்ச படம், தேவி தியேட்டரில் ரிலீசான முதல் வாரம், ஏகப்பட்ட கூட்டம். நண்பனும் நானும் இந்த வாரம் எப்படியாவது படத்த பாத்துடணும்னு முடிவு பண்ணிட்டோம். நான் ஆர்ம்ஸ் ரோட்டில் சந்தித்த தேவி திரையரங்கு ஓனர் விசிட்டிங் கார்டு என் கைல. நேரா மானேஜர் ரூமுக்கு போயி, விசிட்டிங் கார்ட நீட்டுனேன்.

மானேஜர்: “என்ன வேணும்”

நான்: “ஆளவந்தான் படத்துக்கு ரெண்டு டிக்கட்”

மானேஜர்: “சாரை எப்படி தெரியும்”

நான்: “***** பாங்கில் வேல செய்யுறேன், அவர அவர் வீட்டுலயே போயி பாத்திருக்கேன்”

இரண்டு டிக்கட் கைக்கு வந்தாச்சு. வாங்கிய ஜோரில் வெளிய வந்தவனை, நண்பன் “சரி விசிட்டிங் கார்டு” எங்கனு கேக்க….உள்ளே ஓடிப்போய் “சார், அந்த விசிட்டிங் கார்டு…….” னு மானேஜரை கேட்டேன்.

மானேஜர்: “அது எதுக்கு உங்களுக்கு”

திருப்பி கேட்டதுமே “திரும்ப திரும்ப இந்த மாதிரி வந்து டிக்கட் வாங்கதான், வேற எதுக்குனு மனசுக்குள்ள சொல்லிகிட்டேன் ஒன்னும் பேசல. வெளிய வந்துட்டேன்.

நண்பன்: “எங்கடா, விசிட்டிங் கார்டு?”

நான்: “அட வாடா டேய் கமல பாப்போம்”……

மூனு படங்கள சென்னை சத்யம் தியேட்டர் ல் தொடர்ந்து பாத்ததுதான் இன்று வரை வாழ்நாள் சாதனை….அதுக்கு மேல தூக்கம் வந்திடுச்சு…

ஒரே படத்த 8 முறை பாத்ததும் வாழ்நாள் சாதனையில வரும். ரஜினி நடித்த சிவாஜி படம் தான் அது. வெறும் ரஜினி யின் ஸ்டைலை வைத்து ஒரு படம், அவ்வளவு பிடிச்சிருந்தது….ஸ்ரேயாவையும் அதுக்கப்புறம் பிடிக்க ஆரம்பிச்சுது…

கடைசியா தியேட்டர் ல பாத்த படம் “தர்பார்”.

படம் பாத்து இன்னியோட கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகுது…நினைச்சாலே உடம்பெல்லாம் கூசுது.

இன்னைக்கு சில படங்கள் 2021 பொங்கலுக்கு வெளி வருவதால் தியேட்டர் ல 100% சதவிகித சீட்டை நிறைக்கபோறதா செய்தி…போகணும்னு துடிக்கிறவங்க கிட்ட எங்க அம்மா என்ன கேட்ட கேள்விய, இவங்கள பாத்து கேக்கணும்னு தோணுது…..”படம் பாக்கலைன்னா செத்துருவியா?”

சௌந்தர்ராஜன். ரா.

.

ரஜினி செய்தது துரோகமா?

சிஸ்டம் சரி இல்லனு ஆரம்பிச்சாரு. சரி இவர்தான் நாம் எதிர் பார்க்கிற அரசியல்வாதினு எல்லாரும் நம்புனோம். இடையிடயே மக்களின் எழுச்சி, கொட்டாங்குச்சி என்று எதையெதையோ பேசினார். அட எவ்வளவு சிந்தநாவாதினு நாம நம்பினோம். 2017 லிருந்து ரசிகர்கள் இவர மல போல நம்பியிருந்தாங்க, அண்ணாமலை ஆச்சே!

படம் ஆரபிச்சவுடனே இன்ட்ரோ சாங் தான் எல்லாரும் எதிர்பார்ப்பாங்க. அதப்போலவே மன்ற ஒருங்கிணைப்பாளர், மேற்பார்வையாளர் னு அறிவிச்சு, மாத்துவோம், எல்லாத்தையும் மாத்துவோம் னு அவர் எத சொன்னார்னு இப்ப வரைக்கும் மக்கள் கொழப்பத்தில தான் இருக்காங்க. ஒரு வேல அவரு வச்சிருக்க பழைய காரை கொடுத்துட்டு புது கார் வாங்கிறததான் அப்படி சொன்னாரோ? மாத்துவோம், பழைய கார் எல்லாத்தையும் குடுத்துட்டு 2021 புது மாடல் காரா மாத்துவோம். எப்படி இப்ப கரெக்ட்டா கோர்வையா வருதா?

லாக் டவுன் ஆரம்பிச்சதிலிருந்து வீட்டை விட்டு கொடியில காயிற துணியை எடுப்பதற்குக்கூட வெளியில வராத ரஜினி, அண்ணாத்த படத்துக்கு அவசரம் அவசரமா ஹைதராபாதுக்கு கிளம்பினாரு. ஓ சாரி, அவரு கிளம்பினது லாக் டவுன் முடிஞ்சதும், மறந்துட்டேன். அடடா, தான் நடிச்சப்படம் தன்னால தடையாகக்கூடாது என்ற எப்படிப்பட்ட உயர்ந்த எண்ணம் இந்த மனுஷனுக்கு…நம்புனோம். இத்தனைக்கும் அவர் நடிக்கப்போனது சன் பிக்சர்ஸ் னு எந்த அரசியல் சாயமும் தொடர்பும், நிதியும் இல்லாத ஒரு நிறுவனம். கண்டிப்பா வளர்ந்து வர்ற அந்த நிறுவனத்த ஆதரிக்கணும் னு ஒரு எண்ணம் இருந்திருக்கும்..இருந்திருக்கும்ல? இந்தக்கோரோனா காலத்திலும் அவங்க குரூப் சேனல்கள் ல பழைய படங்கள தூசு தட்டி திருப்பி திருப்பி போட்டு கொஞ்சமா லாபம் சாம்பாதிச்சாங்க. தவிர, அவங்க சன் ரைசர்ஸ் ஹைதராபாத் னு ஒரு ஐ பி எல் அணியோட ஓனர் அவ்வளவுதான். சரி இதெல்லாம் இப்ப எதுக்கு….ரஜினி ஹைதராபாத் போனார்னு சொன்னேன், அதனால இந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் குறுக்க வந்திடிச்சு….எனிவேஸ்…

ஷூட்டிங் போது யாருமே எதிர்பாராத விதமா ரஜினிக்கு ரத்த அழுத்தம் அதிகமாயிடிச்சு. அவருக்கு சிறு நீரக மாற்றம் பத்திலாம் ரொம்ப வெளிப்படையா பேசியிருந்தது ஞாபகம் வரவே, வழக்கம் போலவே ரசிகர்கள் எல்லோரும் வேண்டிக்கிட்டாங்க. அவரு நல்ல படியா மீண்டு வந்திடணும்னு. ஆனா இந்த தடவ மண் சோறு சாப்பிடல. மண் சோறு சாப்பிடுற அளவுக்கு ரஜினி யின் உடல் நிலையும் அவ்வளவு மோசமா இல்ல, அதுவும் ஒரு காரணம்.

டிசம்பர் மாசக்கடைசியில எல்லாரும் ஒரு நல்ல விஷயம் நடக்கப்போது னு நம்புனாங்க. கட்சி ஆரம்பிப்பார்னு நம்புனாங்க…மாற்றம் வரப்போது னு நம்புனாங்க. ஊழல் இல்லாத ஆட்சி வரும்னு நம்புனாங்க. மக்கள் ஆட்சியா இருக்கப்போகுது னு நம்புனாங்க. இந்தத்தடவ ரஜினிக்கு தான் என் ஓட்டு னு சொல்லி, ஓட்டு ரஜினிக்கு போடப்போறோம் னு நம்புனாங்க….மன்ற நிர்வாகிகள் மக்களுக்கு நல்லது செய்யப்போறோம் னு நம்புனாங்க, ரஜினியின் அரசியல் பரப்புரைகள் கேட்போம்னு நம்புனாங்க. மக்களுக்கான ஒரு மகத்தான தேர்தல் அறிக்கை வெளி வரும்னு நம்புனாங்க. இவ்வளவு நம்பிக்கைக்கும்……இந்த பதிவின் தலைப்பு தான் கேள்வி….பதில் தெரிஞ்சா, இருந்தா நீங்க கீழ கமெண்ட்ஸ் ல பதியுங்க. நீங்க பதிவிங்கனு நானும் நம்புறேன் 🙂

எப்படி இருந்துச்சு லாக்டவுன் – பகுதி 2

மார்ச் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போது எங்கள் யாருக்குமே தெரியாது நாங்கள் பல மாதம் ஒருவருக்கு ஒருவரை நேரில் சந்திக்க முடியாது என்பது….

மார்ச் 16 ஆம் தேதி திங்கட்கிழமை காலை எங்க நிறுவனம் அனுப்பின மின்னஞ்சலை அப்பதான் படிக்கிறேன்…ஒரே குதூகலம்…நான் ஏற்கனவே சொன்னது போல் சுடு சோறு என்பது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்…சூடு என்றவுடன் என் மனைவி காப்பி கொடுக்கும் போது, கொஞ்சம் சூடு பண்ணி கொடேன் னு நான் சொன்னவுடனே, உங்களுக்கு டம்ளரை காச்சிதான் குடுக்கணும் னு அன்பா சொல்றது நினைவுக்கு வந்தது. என் நாக்கு அவ்வளவு நீளம். வயித்துக்குள்ள போயி வெந்துக்கட்டும் னு நீங்க எப்பயாவது சாப்பிடும் போது சொல்லியிருப்பீங்கன்னா, நாமெல்லாம் ஒரே கட்சி.

எங்க நிறுவனத்துல வீட்டிலிருந்து வேல பாக்குறதுலாம் வழக்கத்துல இல்ல…

பல நேரங்கள்ல அது ஒத்து வராதுன்னு அந்த மாதிரி சலுகை யாருக்கும் கொடுக்கப்படல…அப்படி ஒரு சலுகை பெறுவதா இருந்தா ஒன்னு அவங்களுக்கு கொழந்த பொறந்திருக்கணும், இல்ல உடம்புக்கு முடியாம இருக்கணும்….

ஒரு கட்டத்துல குழுல இருக்க பல பேர் நாங்க எங்க சொந்த ஊருக்கு போயிடலாமான்னு என்னை கேக்க, ஏன்பா எப்படி நீங்க ஊர் போய் சேர்வீங்க னு நான் பதிலுக்கு அவங்கள கேக்க…. இங்க சாப்பாடு கிடைக்கில, ஹோட்டல்லாம் மூடிட்டாங்க, ஹாஸ்டல் மெஸ் லையும் சரியான சாப்பாடு இல்ல, அதுக்காகவே நாங்க போயி ஆகணும் ங்கிற சூழ்நிலை னு அவங்க சொன்னதுக்கப்புறம் தான் என் புத்தி க்கு உறைச்சுட்டுது…

குடும்பத்தோடு சென்னையில் வசிக்கிற என்னை மாதிரியான ஆளுக்கு இந்த லாக் டவுன் சோறு விஷயத்தில் வரம் னு சொல்லலாம். வீட்டை விட்டு, குடும்பத்தை விட்டு வேலைக்காக சென்னை வந்த இவங்களோட நிலைமையை யோசிச்சு ஆக வேண்டிய கட்டாயம்…சரி போயிட்டு வாங்கன்னு சொல்றதுதான் சரி….ஆனா கவனமா இருங்க, பாதுகாப்பா போங்க…ன்னு சொல்ல மட்டுமே முடிஞ்சுது

தொடர்வேன்

உங்கள் சௌந்தர் ராஜன்.இரா.

எப்படி இருந்துச்சு லாக் டவுன்?

அத ஏன் கேக்கறீங்க னு நீங்க கேக்குறது புரியுது….ஆனா என் அனுபவத்த இங்கப்பகிரும் போது உங்களுக்கு நினைவுகள் மலரும். புன்னகை பூக்கும். அந்தப்புன்னகையை வர வைக்கிறதே என் நோக்கமாக இருக்கும். இப்பவும், எப்பவும்….

பொதுவாகவே நம்முடைய கற்பனை வளம் என்னைப்பல நேரம் ஆச்சரியப்படுத்தும். நோய் பரவுதுன்னவுடனே, சாவுதான் எல்லோரும் பயந்த விஷயம். அய்யய்யோ நான் செத்துடுவேன், என் கொழந்த குட்டிக்காகவாவது நான் உயிரோட இருக்கணும், அடப்பாவிகளா நான் 90ஸ் கிட்ஸ் டா..இன்னும் கல்யாணம் கூட ஆகல…நான் உயிரோட இருந்து ஒரு கல்யாணம் பண்ணி செட்டில் ஆவணும்டா னு. அடேங்கப்பா ஒர்க் பிரம் ஹோம் னா சுடச்சுட சோறு கிடைக்குதே ன்னு கொண்டாட்டம் என்னைப்போன்றவர்களுக்கு, யப்பாடா ஸ்கூலுக்கு ரெடி பண்ண இனி மூச்சு முட்டாது னு குடும்பத்தலைவிகள். கடைய அடைச்சுட்டமே, இனி எப்படி தொழில் செஞ்சிப்பொழக்கிறது னு, கடைய மூடிட்டாங்களே இனி வேலைக்கு என்ன செய்யுறது னு…இப்படிப்பல தரப்பினர். இதுல வயதான பெரியவர்களின் நிலைமை மோசம்தான்…இதில் முடியாத நிலையில், வீட்ல இளசுகள் எல்லாம் அமெரிக்கா, சிங்கப்பூர் னு வேலை செய்யுதுங்க, மூன்று வேலை உணவும் வீட்டிற்கு வரவழைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்த இந்த தாத்தா, பாட்டிகள் நிலைமை சாப்பாட்டுக்கே வழியில்லைங்கற நிலைமை. கொடுமை என்னன்னா இவங்ககிட்ட நிறைய பணம் இருக்கு, அதனால ஒரு பிரயோசனம் இல்லை. பணத்தையா சாப்பிட முடியும்?

அவங்கவிங்க அனுபவுச்ச வேதனையப்பேசினா ஒவ்வொருத்தருக்கும் நாம ஒரு தனி பிளாக் போஸ்ட் போடணும். சரி அத அப்பறம் போடலாம். கண்டிப்பா போடுவேன். அவ்வளவு கதைகள் இருக்கு.

மார்ச் மாதம் 13 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை. அன்னிக்குதான் அலுவலக நண்பரிடம் சொல்கிறேன் “மளிகை இரண்டு மாசத்துக்கு வாங்கி வைங்க, எப்போ என்னா நிலைமைனு தெரியல….நம்ம வீட்டிலிருந்து வேலை பாக்கச்சொல்லிடுவாங்க…அப்புறம் சைனா மாதிரி லாக் டவுன் வந்திடுச்சுன்னா, சுத்தம், எங்கையும் வெளிய போக முடியாது” னு சொல்லிக்கிட்டிருந்தேன். நான் வேல பாக்குற நிறுவனம், அமெரிக்கா வைத்தலைமை இடமா கொண்ட ஒரு பன்னாட்டு நிறுவனம். இந்த நிறுவனம் சைனாவிலும் இருப்பதால், எங்களின் சைனா சகாக்கள் மூலம் நிலைமை என்னவென்று எங்களில் பெரும்பான்மையானவர்களுக்குத் தெரிந்திருந்தது…

தொடர்வேன்…..

உங்கள் சௌந்தர் ராஜன். இரா.